இன்று புதிதாய் பிறந்தோம்

கடந்த சில மாதங்களாக எல்லோர் மனதிலும் ஒரு விதமான அச்சம். வாழ்வை நினைத்து ஒரு ஐயப்பாடு. முதலில் வீட்டில் இருந்தால் சௌக்கியம் என்று நினைத்தோம் இப்போது வீட்டில் இருந்தால் கூட பாதுகாப்பா என்ற நிலை தோன்றிவிட்டது . அதோடு வீட்டிலேயே இருந்தால் வீடு எப்படி ஓடும் என்ற கேள்விக்குறி மனதில் எழுந்துள்ளது. அதனால்தானோ என்னவோ எந்தவித வேலை எந்த நிகழ்வு எதிலும் மனம் லயிக்கவில்லை . அதுவும் இந்த லாக்டோன் தொடங்கி குடும்பத்தில் நடந்த எந்தவிதமான நல்லது கெட்டது நிச்சயதார்த்தம் திருமணம் நெருங்கிய உறவினரின் இறப்பு எதிலும் யாரும் கலந்து கொள்ள முடியாத ஒரு நிலை இப்படியும் ஒரு வாழ்க்கையா என்ற கேள்விக்குறி.

ஆனால் இவையெல்லாம் ஒரு புறமிருக்க உற்றார் உறவினரும் மற்ற நண்பர்களும் இந்த நேரம் தான் நமக்கு கிடைத்த நல்வாய்ப்பு , தன் கைவண்ணம் கலைவண்ணம், ஒவ்வொருவரும் தங்களின் அரிய திறமையெல்லாம் வெளியில் கொண்டுவந்து தினந்தோறும் சமைக்கும் சமையல் ஆகட்டும் இல்லை கைவேலைகள் ஆகட்டும், ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வந்து அதன் படங்கள் , செய்திகளை வெளியிட இது ஏதோ போட்டி போல் தோன்றியது . நான் மட்டும் இதற்கெல்லாம் விதிவிலக்கு. தினந்தோறும் செய்யக்கூடிய அடிப்படை உணவு வகைகளை மட்டும் செய்துவிட்டு ,( ) அலுவலக வேலையும் மேற்கொண்டு விட்டு இன்றைய பொழுது கழிந்தது நாளை எப்பொழுது விடியும், என்று நினைத்து பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறேன் . ஏன் இப்படி இருக்கிறாய் உனக்கு தெரிந்ததை செய் என்று கேட்கும்போதெல்லாம் நான் என்ன செய்யமுடியும் வாய் மட்டும்தான் அசைத்துப் பேச முடியும் என்று நினைப்பேன் . என் பணி எப்போதும் பேசுவது தானே, சரி அதையே எழுது வாயே இப்பொழுது ஏன் எதுவும் எழுத மாட்டேங்கிறாய் என்றெல்லாம் நெருங்கிய நண்பர்களும் உறவினரும் எத்தனையோ முறை என்னை எடுத்துக் கூறினால் கூட ஏனோ என் மனதில் அலையோசை எழும்பவில்லை. என்னவோ வாழ்க்கை பூராவும் நான் ஓட்டிக் கொண்டு இருந்தது போலவும் இப்போது அது ஸ்தம்பித்துப் போய் விட்டது போலவும் மனதிற்குள் ஒரு எண்ணம் . இப்படி சோர்வடைந்து இருக்கும்பொழுது நான் மனதை செலுத்திய ஒரே இடம் என் செடி கொடிகள் . அவ்வப்போது வீட்டில் நறுக்கும் காய்கறி விதைகள் ஆகட்டும் இல்லை , பல வருடங்களாக பூக்காமல் இருக்கும் செம்பருத்தியும் கனகாம்பரம் செடிகள் ஆகட்டும் மனம் எல்லாம் அதில் செலுத்தி அதை ஒழுங்கு படுத்துவதில் நேரத்தை செலவு செய்து கொண்டிருந்தேன் . ஐம்பது அறுபது செடிகளுக்கு மேல் வைத்திருந்தால் கூட செடிகள் பச்சை பசேலென்று இருக்கிறது ஆனால் ஒரு பூ காய் கூட இல்லையே இதுவும் இன்றைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்று அவ்வப்போது கிண்டலாக வீட்டிற்குள்ளே பேசிக்கொண்டிருந்தேன். உனக்கு எல்லாவற்றிலும் நெகட்டிவ் எண்ணங்கள் தான் என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் பல வருடங்களாக ஒரு மொட்டு கூட வராமல் இருந்த செம்பருத்தி செடியில் பலவித நிறங்களில் பூக்களை காண தொடங்கினேன் .

இதோ இந்த ஃபுட்பால் லில்லி எனப்படும் செடி அழிந்து விட்டதோ என்ற ஐயம் கொண்டிருந்தேன் . விழுந்துவிட்டேன் என்று நினைத்தாயோ மானிடா! என்று நேற்று தலையை தூக்கி அற்புதமான மலராக வெளிவந்தது இந்த செடி. ஏதோ ஒன்று புரிந்தது போல் இருந்தது. எதுவும் நம் கையில் இல்லை. இயற்கை தன் வளர்ச்சியை பாதுகாப்பை தானாகத் தேடிக்கொள்ளும். இன்று கடினமாகத் தோன்றும் இதுவும் கடந்து போகும். நல்லெண்ணத்தோடு நல் உழைப்பைக் கொடுத்தால் கடினமான நாட்களும் பழம் கிடைக்கும் நாட்களாக மாறிப்போகும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. ஆம் அன்று அந்த பாரதி சொன்னது போல விழுந்துவிட்டேன் என்று நினைத்தாயா? போன வினைகள் செய்த தீய பழங்கள் எல்லாவற்றையும் அழித்து இந்தப் பிறவியே எனக்கு நற்கதி கொடுப்பாயா என்று அவன் வரம் கேட்டது போல மனதில் நினைத்து அந்த கிருஷ்ணபரமாத்மா சொன்னது போல் நல்லது கெட்டது எதுவும் நம் கையில் இல்லை . நாம் ஜாக்கிரதையாக நம் கடமைகளை செய்து வந்தால் பலன்கள் தானாக கிடைக்கும் . இதுவும் கடந்து போகும்!! மனதில் புத்துணர்ச்சியோடு மீண்டும் பிறந்து வலம் வருவோம் , ஒன்று கூடி இந்த கஷ்டத்தை கடப்போம.

ஆறு கண்ட புது வெள்ளம் போல மனதில் தோன்றிய புத்துணர்ச்சியோடு அடுத்த அலையோசை உடன் மீண்டும் சந்திக்கிறேன் .அலையோசை தொடரும்.

சகியே என் இனிய சகியே

நாளாம் நாளாம் திருநாளாம் மங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்.

எனக்கு தெரியாது நீ சென்னை வந்து இறங்கின உடனே நேர குரோம்பேட் வந்து என் பேர குழந்தையோடு பிறந்தநாள் விழாவுக்கு வந்துட்டு அதுக்கப்புறம்தான் நீ மேற்கொண்டு இங்கேயும் போகலாம் என்று சொல்லி போன் கீழே வைத்துவிட்டார் சந்திரா. நான் என்ன செய்வது என்று தெரியாமல் கணவரின் முகத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் இரண்டு நாள் பயணம் தில்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதில் என் சித்தியின் எழுபதாவது பிறந்த நாளை அட்டென்ட் செய்ய வேண்டும் என் நாத்தனார் வீட்டுக்குப் போக வேண்டும் மச்சினர் வீட்டிற்கு போக வேண்டும் மற்றும் இன்னும் சில உறவுகள். இதில் சந்திராவின் குடும்ப விழாவுக்கும் போகவேண்டும். நான் சரி என்று சொன்னால்கூட கணவரும் அதற்கு ஒத்துக்க வேண்டுமே. (என்னவோ பெரிய கணவர் என்ன சொன்னாலும் அதைக்கேட்டு நடக்கிற மாதிரி தான் அப்படின்னு சொல்றது தெரியுது) . என்னையும் சந்திராவையும் பற்றி நன்கு அறிந்த படியால் என்கணவர் சரி நாம் குரோம்பேட் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு தாம்பரம் போகலாம் என்றார். வேறென்ன சொல்வார். சந்திரா என் தோழி மட்டுமல்ல, எங்கள் குடும்ப நண்பர். குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் முதல் வயதானவர் வரை எல்லோரும் அவரைப் பற்றி நன்கு அறிவார்கள். முதலில் என் தோழி என்று அறிமுகமாகி இப்போது குடும்பத்தில் இருக்கும் , குடும்பத்தின் நண்பர்கள் அனைவருக்குமே, மிகவும் பரிச்சயமான நண்பர் ஆவார். எங்கள் சிலரின் குருவும் கூட. காலை எழுந்தது முதல் அரக்கப்பரக்க ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் அலுவலகம் சென்று வந்தோம் என்று இருக்கும் என் வாழ்வில் அவ்வப்போது கடவுளின் நாமங்கள் எப்போதாவது ஒலிக்க செய்வதென்றால் அது இந்த சந்திராவின் மூலமாகத்தான். ஏன் சும்மா உட்கார்ந்து இருக்கிறாய் கொஞ்ச நேரம் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லேன், நாராயணியம் ஏன் பாராயணம் செய்யக் கூடாது , தேவி மஹாத்மியம் ஏன் படிக்க கூடாது என்று அவ்வப்போது என்னை கெஞ்சி கொஞ்சி கத்தி திட்டி என்னையும் கொஞ்சம் பதப்படுத்த பார்ப்பாள் சந்திரா. ஏனென்றால் நாராயணியம் வேறு சந்திரா வேறு என்று பிரிக்க முடியாமல் அதிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவள். முதலில் யாரோ ஒன்றிரண்டு பெயர்களுக்கு நாராயணீயம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று ஆரம்பித்து அதன் பிறகு தில்லியின் புற நகர் பகுதிகளில் நாராயணியம் என்றாலே சந்திரா என்ற பெயர் உருவாகும் நிலையானது. எப்பொழுது யார் எனக்கு இந்த ஸ்லோகம் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டு போனாலும் அவர்கள் வீட்டு கதவு திறந்தே இருக்கும். இப்பொழுது தில்லியிலிருந்து சென்னை சென்று விட்டால் கூட இன்னமும் அவளுடைய வகுப்புகள் டிஜிட்டல் முறையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Continue reading “சகியே என் இனிய சகியே”